Thursday, 14 July 2011

வீரபாண்டிய கட்டபொம்மன் - பஞ்சலங்குருட்சி தூத்துக்குடி மாவட்டம்

                        மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வரலாறு!!
சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.
கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.
1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.
அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.
வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.
இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.
பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.
பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.
கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.
வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்
கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.
கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.
விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.



ஜாதி கட்சி அரசியல்வாதிகளை ஒழித்து கட்டுவோம்

ஜாதி கட்சி அரசியல்வாதிகளை ஒழித்து கட்டுவோம்

ங்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள மிக முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, அதற்கு உதவியோரை வரிசைப்படுத்துங்கள். பின்னர் அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். 

அதில் உங்களுக்கு உதவியோர் பெரும்பாலானோர் வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அதிகம் உதவியதில்லை. எனவே ஜாதிகளை மறந்துவிட்டு மனித நேயத்தை வளர்க்கப் பாடுபடுங்கள்''என்று சமூக ஆர்வலர் ஒருவர் பேசினார்.  


1906-ல் ஆங்கிலேயரின் ஏகபோக வணிக முறையைக் கண்டித்து சுதேசி கப்பல் கம்பெனி மூலம் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பலோட்டினார் வ.உ.சி. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு, பயணக் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தது. இதையடுத்து சுதேசி கப்பல் நிறுவனமும் தனது கட்டணத்தை 50 பைசாவாக்கியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பயணத்தையே இலவசமாக அறிவித்தது. விளைவு, சுதேசி கப்பல்கள் காலியாகச் சென்றன.

பெருத்த நஷ்டத்துக்கு இடையே 1909-ல் சுதேசி கப்பல் கம்பெனி திவாலாகியது.  கோயம்பத்தூர் சிறைச்சாலையில் செக்கிழுத்த வ.உ.சி. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது, அவரை வரவேற்க வந்தவர்கள் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட இருவர் மட்டுமே.  

1800-களின் தொடக்கத்தில் கொங்கு நாட்டின் பாளையக்காரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி பிரெஞ்ச் நாட்டின் ராணுவப் பயிற்சி பெற வைத்தார். 

இதே காலகட்டத்தில் திப்பு சுல்தான் தனது மைசூர் படை மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டபோது அவருக்குத் தனது படையுடன் பகிரங்கமாக உதவியவர் சின்னமலை.  திப்புசுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர், தீரன் சின்னமலையையும் பழிதீர்த்தனர். 

முதல் இந்திய சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். 1789-ல் 12 ஆயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயரின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஆற்காடு நவாபை மருது பாண்டியர்கள் விரட்டியடித்தனர். 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கினர். இதையடுத்து ஆங்கிலேயர்கள் மருது பாண்டியர்களை வீழ்த்தினர். மருது சகோதரர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு கூறிய வரிகள் "நண்பர்களுக்காகப் போராடினோம்.... நாட்டுக்காக உயிர் துறக்கிறோம்'.  எட்டையபுரத்தில் சுப்பிரமணியனாகப் பிறந்து குறுகிய காலத்திலேயே மகாகவியாகிப் போற்றப்பட்டவர் பாரதி. தனது பாடல்கள் மூலம் தேசப்பற்றை ஊட்டி வளர்த்த பாரதி வறுமையில் வாடினார். 

39 வயதில் பாரதி மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறும் பதினான்கு பேர் மட்டுமே.  மேற்குறிப்பிட்டுள்ள தலைவர்கள் வாழ்ந்தபோது தங்கள் ஜாதியினரை முன்னிறுத்தியது இல்லை. 

தேசம், நாட்டுப்பற்று, தியாகம்தான் அவர்களின் இதயத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தன. நாட்டின் சொத்தாக விளங்கக்கூடிய தியாக சீலர்களை எல்லாம் ஜாதிக் கண்ணோட்டத்தில் கொண்டு வருவது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது.  தியாகத் தலைவர்கள், அண்ணா, பெரியார், ராஜாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களெல்லாம் கோலோச்சிய தமிழகம், இன்று ஜாதியக் கட்சிகளின் பின்னால் செல்லும் நிலைமை. 

ஒரே ஜாதிக்கு பல கட்சிகள். அந்தப் பல கட்சிகளும் எதிர் எதிர் அணியில் கரம்கோத்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் தோல்வி பயத்தால் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப் போட்டி போடுகின்றன.  

இப்போதைய நிலவரப்படி விடுதலைச் சிறுத்தைகள்-புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு முன்னேற்றப் பேரவை-கொங்கு இளைஞர் பேரவை, பா.ம.க.-வன்னியர் கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி-முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கட்சி-பெருந்தலைவர் மக்கள் கட்சி என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காகப் போராடுவதாகக் கூறும் இவர்கள், வரும் தேர்தலில் முண்டாசு கட்டத் தயாராகிவிட்டனர். 

புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கு இதுவரை இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது.  ஜாதி அமைப்புகள் இருக்கக் கூடாது என்பது நம் வாதம் அல்ல. பதவியை அடைய குறுக்கு வழியாக ஜாதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு ஏற்கெனவே உள்ள பெரிய அரசியல் கட்சிகளும் துணை போகின்றனவே என்பதுதான் எதார்த்தவாதிகளின் கவலையாக உள்ளது.  

ஓரிரு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகி, ஒட்டுமொத்த ஜாதிக்காரர்களை முன்னேற்ற முடியும் எனில் அந்த ஜாதியைச் சேர்ந்த, அரசியல் கட்சிகள் மூலம் பதவியில் இருந்த நூற்றுக்கணக்கான எம்.எல்.ஏ.க்கள் செய்யாதது ஏன்? சமுதாய வளர்ச்சிக்கு அரசியல் பதவி மட்டுமே பயனளிக்காது.  

மேலே குறிப்பிட்ட தலைவர்களை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் தங்களை முதலியார், ஐயர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், நாயுடு என கொச்சைப்படுத்துவார்கள் என தங்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த மாமனிதர்கள் தமிழகத்துக்குச் சொந்தமானவர்கள். அவர்களை ஜாதிய முன்னோடிகளாக்கிக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோள். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஏழைகள்- பணக்காரர்கள் என்பதுதான் அது.